Thursday, August 18, 2011

தெய்வத் திருமகள்


குழந்தையும் தெய்வமும் ஒன்று. அப்படிப்பட்ட ஆறு வயது குழந்தையின் அறிவை கொண்ட அப்பாவின் தேவதையைப் பற்றிய கதையே தெய்வத் திருமகள்.

ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி கிராமத்தில் சாக்கிலேட் ஃபேக்டரியில் வேலை செய்பவர் கிருஷ்ணா(விக்ரம்). ஆறே வயதோடு மன வளர்ச்சி நின்றுவிட, ஆள் மட்டும் வளர்ந்து திருமணம் புரிந்து, ஒரு குழந்தைக்குத் தந்தையாகிறார். அக்குழந்தையை நன்பர்களோடு வளர்க்கிறார். குழந்தையின் சித்தியான அமலா பால் அவரைக் கண்டுகொள்ள, குழந்தை யாருக்குச் சொந்தம் என்னும் போராட்டமே கதை.

விக்ரம் குழந்தை அழுவதைக் கண்டு செய்வதறியாமல் அமர்ந்திருக்கும் போதும், “மரம் ஏன் உயரமா இருக்கு ?, காக்கா ஏன் கருப்பா இருக்கு?” என்னும் நிலாவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதும், இறுதியில் குழந்தையை ஒப்படைக்கும்போதும் நடிப்பால் நம்மை அசர வைக்கிறார்.

நிலாவாக வரும் சுட்டிப்பெண் சாரா அழகுப் பதுமை. அப்பா வீட்டிற்குத் தாமதமாக வரும் போது கோபித்துக் கொள்வது கொள்ளை அழகு. கோர்டில் அப்பாவிடம் “சாப்பிடலையா? மெலிஞ்சிட்டியே” என சைகையில் கேட்பது அருமை!

அமலா பாலின் பெரியக் கண்கள் பாதிக் கதையைச் சொல்லிவிடுகிறது. யதார்த்த நடிப்பால் கதாப்பாத்திரத்தோடு ஒன்றிப்போகும் அனுஷ்காவிற்கு இது இன்னொரு வெற்றி.
கார்த்திக்குமாரைப் பார்க்கும்போதுதான் பாவமாக இருக்கிறது. எத்தனை படத்தில்தான் கதாநாயகியைக் கோட்டை விடுவார் ?

Y.G. மகேந்திரனையும் நாசரையும் விஜய் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. வார்த்தை வராமல் உதடு துடிக்கும் வெவ்வேறு காட்சியில் சோகத்தை விட சலிப்பையே இருவரும் ஏற்படுத்துகின்றனர். சந்தானம் தனக்கு ஜோடியே இல்லை என்னும் கவலை தீரவே பீச் காட்சியில் அனுஷ்காவுடன் குடையோடு உட்கார்த்திருக்கும் காட்சி அமைக்கப்பட்டதோ ? (அதை போஸ்டரிலும் காணமுடிகிறது.)

G.V. பிரகாஷின் இசையும், பின்ணனி இசையும் படத்தின் உணர்ச்சிகளை நமக்குள் புகுத்திவிடுகின்றது. அனைத்துத் தமிழ் படத்தைப்போல பாதிக்கப்பட்டோரை பல மணி நேரம் கோர்ட்டில் வாதாடவிடாமல், சைகை மொழியிலேயே நிலாவும் விக்ரமும் பேசிக்கொண்டு மனதைக் கவரச் செய்ததற்கு பாராட்டுக்கள்.

என்றாலும் தமிழ்ப்பட க்ளஷேக்கள் பலவற்றைக் காண முடிகிறது. விக்ரமின் மனைவி பிரசவத்தில் இறப்பது, அவரது முகத்தை இறுதிவரை காண்பிக்காதது (அழகனிலேயே இதைப் பார்த்தாச்சே), விக்ரம் அனுஷ்காவை கட்டிப்பிடித்ததும் ஒரு பாட்டு, படத்தின் இறுதியில் அனைவரும் திருந்திவிடுவது என, இறுதி காட்சி தவிர எல்லாமே எதிர்பார்த்ததுதான்.
விக்ரம் கதை சொல்வது மூன்றாம் பிறையை நினைவுப்படுத்திவிடக் கூடாது என இயக்குனர் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.

என்னதான் நண்பர்கள் உதவினாலும், விக்ரமால் எவ்வாறு குழந்தையை ஐந்து வயது வரை வளர்த்திருக்க முடியும்? 20 வருட அனுபவமிக்க வக்கீலை அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட முடியுமா? நிலாவின் பள்ளிக்கூடத்தின் பெயரையே ஞாபகம் வைத்திருக்க முடியாத விக்ரமால் எவ்வாறு நாசரின் குழந்தைக்கு சரியான மருந்தை கடையிலிருந்து வாங்கிவர முடிந்தது?

இப்படி படம் முழுக்க லாஜிக் ஓட்டைகள். இதையெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு நடிப்பையும் பாசத்தையும் மட்டும் ரசிக்கும்போது நெஞ்சை நெகிழச் செய்கிறாள் தெய்வத் திருமகள்.